ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் தினமும் அர்ச்சகர்கள் மட்டும் கோவிலில் பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் உண்டியல் ஒன்றை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். நேற்று வழக்கம்போல் கோவிலுக்கு வந்த அர்ச்சகர்கள் உண்டியலை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் அதிகாரிகள் கோவிலுக்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் கோவிலில் உள்ள தற்காலிக உண்டியலை கொள்ளையர்கள் 2 பேர் முகத்தில் துண்டு கட்டிய நிலையில் கொள்ளையடித்து சுவர் ஏறி குதித்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் நகர் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தி வழக்குபதிந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.