செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் டிரைவர் வெட்டிக் கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று அதிகாலை வீடு புகுந்து கார் டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம் தவிர்த்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 29), கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இன்று அதிகாலை சுந்தர மூர்த்தியின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. சத்தம் கேட்டு சுந்தரமூர்த்தி எழுந்து வந்து கதவை திறந்தார்.

அப்போது திபுதிபுவென வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் சுந்தரமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

கணவரின் அலறல் சத்தம் கேட்டு சுந்தரமூர்த்தியின் மனைவி ஓடி வந்தார். ரத்த வெள்ளத்தில் தனது கணவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த கொடூரக்கொலை குறித்து வன்னியம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுந்தர மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரமூர்த்தியை வெட்டிக் கொன்றது யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.