செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பஸ்-மினிலாரி மோதல்: நெல்லை டிரைவர் பலி

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பஸ்-மினிலாரி மோதிய விபத்தில் நெல்லை டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லையில் உள்ள உடையார்பட்டியை சேர்ந்தவர் நாராயணதாஸ் (வயது27) இவர் மினி லாரி டிரைவராக உள்ளார். இன்று அதிகாலை இவர் மினிலாரியில் திருச்செந்தூர் சென்றுவிட்டு நெல்லை திரும்பி வந்தார்.

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி அருகே வந்த போது எதிரே வந்த அரசு பஸ் மினிலாரி மீது மோதியது. இதில் மினிலாரி நொறுங்கியது. டிரைவர் நாராயணதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

அவரது உடலை உடனடியாக மீட்க முடியாததால் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.