சுபா 
செய்திகள்

ஸ்ரீமுஷ்ணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி

ஸ்ரீமுஷ்ணத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (36), கூலி தொழிலாளி. இவரது மனைவி சுபா (28).

இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுபாவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது.

உடனே அவரை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நன்றாக உள்ளது. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் சுபாவுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது.

உடனே அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுபாவை பரிசோதித் தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரவு சுபா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுகாதாரதுறை இணை இயக்குனர் ஜவகர் கூறியதாவது:-

டெங்குகாய்ச்சலால் இறந்த பெண்ணின் சொந்த ஊரான கானூரில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று சோதனை செய்தனர். அப்போது 52 பேரை பரிசோதித்ததில் ஒருவருக்கு மட்டும் காய்ச்சல் அறிகுறி இருந்தது. அதுவும் சாதாரண காய்ச்சல்தான். 10 பேருக்கு சளி, இருமல் இருந்தது. யாருக்கும் டெங்கு அறிகுறி தென்படவில்லை. இருப்பினும் மருத்துவ குழுவினர் அந்த கிராமத்தில் தொடர்ந்து முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.