செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் சிறிசேனா சாமி தரிசனம்

ஆந்திர மாநிலத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று காலை தரிசனம் செய்தார்.

திருமலை:

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, நேற்று இரவு திருப்பதிக்கு சென்றார். அங்கு வந்த சிறிசேனாவை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்றனர். அதன்பின்னர் திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அதிபர் சிறிசேனா தங்கி ஓய்வெடுத்தார்.

இந்நிலையில், இன்று காலை இலங்கை அதிபர் சிறிசேனா தனது மனைவி ஜெயந்தி புஷ்பகுமாரி மற்றும் சில அதிகாரிகளுடன் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றார். காலையில் நடைபெற்ற சிறப்பு தரிசன சேவையில் அவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்தில் அவரை அமர வைத்து, பட்டு சால்வைகள் போர்த்தப்பட்டன. அதன்பின்னர் லட்டு உள்ளிட்ட ஏழுமலையான் பிரசாதங்கள் மற்றும் 2018-ம் ஆண்டின் நாள்காட்டி மற்றும் கையேடு, ஏழுமலையானின் திருஉருவப்படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினார்கள்.

இலங்கை அதிபர் சிறிசேனா வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT