செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 3 பேர் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மேலும் 3 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 247 விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் ஜலாலுதீன் (வயது 50), ராசு (62), அசார் (40) ஆகிய 3 பேரும் ஒரு விசைப்படகில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 37 கடல் மைல் தொலைவில் உள்ள இந்திய கடல் பகுதியான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 3 பேரையும் விசைப்படகுடன் சிறைப் பிடித்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

கடந்த 22-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட ஜலாலுதீன், அசார் ஆகியோர் நாளை ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட இருந்தனர். இதற்காக கடலுக்கு சென்று அதிக மீன்கள் பிடித்து வருமானம் கொண்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றனர்.

மேலும் அவர்களின் வருகைக்காக குடும்பத்தினரும் காத்திருந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்த இருவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளதோடு ரம்ஜானை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.