தஞ்சாவூர்:
மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை வருகிற 30-ந்தேதி நடக்கிறது. தேவர் ஜெயந்தி விழாவின் போது அவருக்கு அணிவிப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14½ கிலோ எடை கொண்ட ரூ. 4 கோடி மதிப்பில் தங்க கவசம் கொடுத்தார். ஜெயந்தி விழாவின் போது அந்த தங்ககவசம் அணிவிக்கப்படும். பின்னர் ஸ்டேட் வங்கியில் அது பாதுகாப்பாக வைக்கப்படும். ஜெயலலிதா இருந்த காலங்களில் ஜெயந்தி விழாவின் போது அந்த தங்ககவசம் அ.தி.மு.க.வினரால் எடுத்து வரப்பட்டு அணிவிக்கப்படும்.
தற்பொழுது அ.தி.மு.க. இரண்டு அணிகளாக இருப்பதால் அந்த தங்க கவசத்தை யாரிடம் கொடுப்பது என்பதில் சிக்கல் எழுந்துள்ளளாக கூறப்படுகிறது. ஜெயலலிதா என்ன நோக்கத்திற்காக அந்த தங்க கவசத்தை கொடுத்தாரோ அது நிறைவேற வேண்டும். எனவே வங்கி நிர்வாகம் அந்த தங்க கவசத்தை கலெக்டரிடமாவது ஒப்படைத்து அணிவிக்க செய்ய வேண்டும்.
மாமன்னர் ராஜராஜசோழன் தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்று நாங்கள் கூறிவருகிறோம். அதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து இல்லை. அதுதான் உண்மை. தஞ்சையில் வருகிற 29, 30-ந்தேதி நடைபெறும் சதய விழாவின்போது ராஜராஜசோழனுக்கு அனைத்து சமுதாயத்தினரும் அஞ்சலி செலுத்தலாம்.
கரைபுரண்டு ஓடிய காவிரி இன்று வறண்டு விட்டது. போராட்டம் நடத்தியதின் விளைவாக இப்போது தான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதுவும் கடைமடை பகுதிக்கு இன்னும் சென்று சேரவில்லை. நதிகளை இணைத்தால் தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.