செய்திகள்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். #Rameswaramfishermen #fishermen

மாலை மலர்

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று விசைப் படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர். இவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 30-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.

இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை எனக்கூறி மிரட்டியதோடு உடனே இங்கிருந்து செல்லுங்கள் என விரட்டினர்.

மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக கரை திரும்பினர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடிப்பது, வலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய எல்லையில் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படையினரின் தொந்தரவு உள்ளது. இதற்கு மத்திய அரசுதான் தீர்வு காணவேண்டும் என்றனர். #Rameswaramfishermen #fishermen