இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார்.
சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார்.
நவம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2 முறை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ராஜபக்சே எப்படி பிரதமர் பதவியில் நீடிக்கலாம் என பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய் தன. 16-ந்தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. நாற்காலிகளும், மிளகாய் பொடியும் வீசப்பட்டது. போலீசார் அவைக்கு உள்ளே அழைக்கப்பட்டதும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில எம்.பி.க்களும் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த சபாநாயகர் நேற்று ஒரு குழுவை அமைத்தார்.
இதற்கிடையே நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகளை செய்வதற்கு தடை விதித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட அவையில் 123 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. ராஜபக்சே ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர். இது ராஜபக்சேவுக்கு மற்றொரு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.இதுபோன்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகளால் கொண்டுவர முடியாது. அரசு சார்பில் மந்திரி ஒருவர் தான் கொண்டுவர முடியும் என்று சிறிசேனா கட்சி எம்.பி. திசநாயகே தெரிவித்தார்.