கொழும்பு:
இலங்கையில் உள்ளாட்சி பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 341 இடங்களில் 240-க்கும் அதிகமான இடங்களில் ராஜபக்சே கட்சிக்கூட்டணி வென்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தன்னுடைய வலுவான களங்களான கொழுப்பு பிரதேசத்தில் பல இடங்களை பெரமுனா கூட்டணியிடம் இழந்தது. இந்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள மகிந்த ராஜபக்சே, “சிறிசேனா தலைமையை மக்கள் ஏற்கவில்லை. இனியும் இந்த அரசு தொடரக்கூடாது என மக்கள் தீர்ப்பளித்துவிட்டனர்” என பேட்டியளித்துள்ளார்.
மேலும், பாராளுமன்றத்திற்கு உடனே தேர்தல் நடத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக்க வேண்டும் என இலங்கை சுதந்திரா கட்சியில் குரல் எழுந்துள்ளது.