செய்திகள்

வேதாரண்யம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை மீனவர்கள்

வேதாரண்யம் மீனவர்களை கத்தி முனையில் மிரட்டிய இலங்கை மீனவர்கள் வலைகளை அறுத்து மீன்களை பறித்து சென்றனர்.

மாலை மலர்

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த திருமால், சத்திய நாதன், ராஜேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 4-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று இரவு அவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் கத்தி முனையில் வேதாரண்யம் மீனவர்களை மிரட்டினார்கள்.

பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறித்தனர். சுமார் 600 கிலோ எடையுள்ள வலைகளையும் அறுத்து வீசினார்கள் இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். வேதாரண்யம் மீனவர்கள் கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை. அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இன்று காலை வேதாரண்யம் மீனவர்கள் கரைக்கு திரும்பினார்கள். இது குறித்து கடலோர காவல் குழுமத்தில் புகார் செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை விரட்டியடித்தது மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.