ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த நெல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு 168 மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஓசூரை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
45 வயதான இவர் அந்த பள்ளி அருகே உள்ள உள்ளுகுருக்கை பகுதியில் தங்கி இருந்து 1-ம் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
இவரைப் பற்றிய வீடியோக்கள் யூடியூப்பில் பரவியது. இந்த வீடியோக்களை பார்த்த நெல்லூர் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த ஆசிரியையும் ஓசூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பஸ்சில் நெருக்கமாக அமர்ந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதனால் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், உதவி தொடக்க கல்வி அதிகாரி நாகராஜன் ஆகியோர் குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியதாவது:-
யூடியூப்பில் ஆசிரியை சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும், இந்த காட்சிகளை வெளியிட்ட அந்த வாலிபரை கைது செய்ய வேண்டும், ஆசிரியையை பணி நீக்கம் செய்ய வேண்டும், அல்லது வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவர்களது கோரிக்கையை உதவி தொடக்க கல்வி அதிகாரி ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியையை சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரியிடம் அவரை சஸ்பெண்டு செய்ய உதவி தொடக்க கல்வி அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று அல்லது நாளை ஆசிரியை சஸ்பெண்டு ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஆசிரியையை அந்த வாலிபர் வேண்டும் என்றே சிக்க வைத்துள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியையின் உறவினர் ஒருவர் கூறியதாவது:-
ஆசிரியையைக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் அதிக நண்பர்கள் உண்டு. அந்த வகையில் ஓசூரை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் ஆசிரியைக்கு பழக்கமானார். அவர் ராயக்கோட்டையில் உள்ள ஒரு தக்காளி மண்டியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் 2 பேரும் பழகினார்கள். இதை அவர் சாதகமாக பயன்படுத்தி சிரித்து பேசியதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் இதை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி வந்தார். இதனால் ஆசிரியை தனது சம்பள பணத்தை அந்த வாலிபரிடம் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் ரூ.8 லட்சம் கேட்டு மிரட்டினார். அவ்வளவு பணம் தன்னால் கொடுக்க முடியாது என்று ஆசிரியை கூறியதால் ஆசிரியை சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு பிரச்சினையை பெரிதுபடுத்திவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியை சம்பந்தப்பட்ட யூடியூப் காட்சிகளை நீக்க கெலமங்கலம் போலீசார் சேலம் சைபர் கிரைம் போலீசாருக்கு பரிந்துரை அனுப்பி உள்ளனர். இன்னும் ஒருசில நாட்களில் அந்த வீடியோ காட்சிகள் அழிக்கப்பட உள்ளன.
அந்த வீடியோக்களை வெளியிட்ட ஓசூர் வாலிபர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியை குறித்து பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா, பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் அரியப்பன் ஆகியோர் கெலமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள் ளனர்.
அந்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews