செய்திகள்

டெங்கு கொசு உற்பத்தி: பெரம்பலூர் ஆவின் மையத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

டெங்கு கொசு உற்பத்தி ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரம்பலூர் ஆவின் மையத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாலை மலர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

அதனடிப்படையில் நேற்று பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 6, 7, 8, 10 ஆகிய வார்டுகளில் கலெக்டர் ஆய்வு செய்தார். வார்டு எண் 7-ல் கம்பன் நகர், முத்துநகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிப்பவர்களின் வீடுகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரில் கொசுப்புழு உள்ளதா என கண்டறிந்து உருவாகும் வகையில் தண்ணீர் தேங்க விடக்கூடாது என்றும், சுற்றுப்புற சூழலை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் பொதுமக்களுக்கு கலெக்டர் சாந்தா நிலவேம்பு கசாயம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து வார்டு எண் 8-ல் பங்களா ஸ்டாப் பகுதி, பள்ளிவாசல் தெரு, நியூ காலனி மற்றும் அங்கு உள்ள ஆவின் பால் மைய வளாகத்தினை திடீராய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்றவும், டெங்கு கொசுப்புழு உருவாக காரணமாக உள்ள காரணிகளை கண்டறிந்து அதனை அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.

கொசுப்புழு உருவாக காரணமாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்ததற்காக ஆவின் மையத்திற்கு அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்டு அங்கு உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிவறை பீங்கான்களை உடனே அகற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து வார்டு எண் 10-ல் அமைந்துள்ள தீரன் பேருந்து டிப்போ நிலையத்தை ஆய்வு செய்ததில் பேருந்தின் பழைய உதிரி பாகங்கள், டயர்கள் கிடந்ததை கண்டுபிடிக்கப்பட்டு அவைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டு மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதேபோல் தமிழ்நாடு மது பானக்கிடங்கினை ஆய்வு செய்ததில் காலி பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உருவாகி அவ்வளாகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை கண்டறியப்பட்டு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.