பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குநரின் ஆலோசனையின் பேரில் சேலம் மண்டல பேரூராட் சிகளின் உதவி இயக்குநர் கண்ணனின் பரிந்துரையின்படி பொத்தனூர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த வார்டுகளில் டெங்கு தடுப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்து அடிக்கும் முகாம் நடைப்பெற்றது.
முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கீதா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். இதில் அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட வீட்டை சுற்றிலும் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய்சிரட்டைகள், தேவையற்ற பொருட்கள், டீ கப், உரல், பழைய டயர்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்றப்பட்டது. மக்களுக்கு சுகாதாரத்துடன் இருப்பது குறித்தும், டெங்கு வராமல் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குளோரின் பவுடர் போடப்பட்டது. வார்டு முழுவதும் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டார்.