செய்திகள்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சிறப்பு வாய்ந்த வெற்றி: கோலி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து கேப்டன் விராட் கோலி, இது சிறப்பு வாய்ந்த் வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

காலே:

காலே டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

கடந்த முறை (2015-ம் ஆண்டு) இங்கு நடந்த டெஸ்டில் (176 ரன் இலக்கு) வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த தோல்வி எங்களது மனஉறுதியை சீர்குலைப்பதாக அமைந்தது. ஆனால் இந்த முறை ஒருங்கிணைந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறோம். மேலும் இப்போது நாங்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த அணி. களத்திலேயே அதை பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொருவரும் பொறுப்புடன் ஆடினர்.

கடந்த முறை இங்கு விளையாடியதுடன் ஒப்பிடும் போது ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. அதாவது ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் பந்து வீச்சாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அத்தகைய நிலையில் கிடைத்திருக்கும் இந்த வெற்றியை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன்.

அடுத்த டெஸ்டுக்கு லோகேஷ் ராகுல் உடல்தகுதி பெறும் போது, யார் தொடக்க ஜோடி என்ற தலைவலி வந்து விடும். அபினவ் முகுந்தின் பேட்டிங் அருமையாக இருந்தது. சதம் அடிப்பதற்கு அவர் தகுதியானவர்.

இவ்வாறு கோலி கூறினார்.

இலங்கை பொறுப்பு கேப்டன் ஹெராத் கூறுகையில், ‘இந்த டெஸ்டில் டாஸ் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நினைக்கவில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக காணப்பட்டது. மூன்று துறைகளிலும் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும். எல்லா வகையிலும் அற்புதமாக ஆடிய இந்தியாவுக்கே ஒட்டுமொத்த பெருமையும் சாரும். அவர்கள் எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டனர்.

குணரத்னே காயத்தால் விலகியது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அவர் 8 வாரங்கள் விளையாட முடியாது.

எனக்கு விரலில் ஏற்பட்ட காயம் இப்போது பரவாயில்லை. முன்பு எலும்பு முறிவு ஏற்பட்ட விரலில் தான் இப்போதும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை எலும்பு முறிவு இல்லை’ என்றார்.