சென்னை:
பொங்கல் பண்டிகை நேரத்தில் பஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக் நீடித்து வருவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது எப்படி என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் ரெயில்வேயின் உதவியை அரசு நாடியுள்ளது.
இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று தெற்கு ரெயில்வே சுவிதா சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
சுவிதா சிறப்பு ரெயில்களில் வழக்கமான கட்டணத்தை விட 2 அல்லது 3 மடங்கு கட்டணம் அதிகமாகும்.
இந்த சிறப்பு ரெயில்களில் எவ்வளவு இடங்கள் இருக்கின்றது என்பதை பொறுத்து கட்டணம் மாறுபடும். இடங்கள் குறைந்து கொண்டே வரும்போது கட்டணம் பல மடங்கு அதிகரித்து செல்லும்.
விமானங்களில் கட்டணம் நிர்ணயிக்கும் முறையில் சுவிதா ரெயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது விடப்பட்டுள்ள சுவிதா சிறப்பு ரெயில்களில் விமான டிக்கெட்டை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலிக்கு செல்லும் சிறப்பு ரெயிலில் 3-ம் வகுப்பு ஏ.சி.க்கு ரூ.3745 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதனுடைய வழக்கமான கட்டணம் ரூ.1020 ஆகும்.
2-ம் வகுப்பு ஏ.சி. கட்டணமாக ரூ.5300 வசூலிக்கப்படுகிறது. இதனுடைய வழக்கமான கட்டணம் ரூ.1470.
ரூ.375 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள 2-ம் வகுப்பு படுக்கைக்கு சுவிதா சிறப்பு ரெயிலில் ரூ.1315-க்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
இதே போல சென்னையில் இருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரசில் கோவைக்கு 2-ம் வகுப்பு படுக்கை கட்டணமாக ரூ.315 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுவிதா சிறப்பு ரெயிலில் ரூ.1105 வசூலிக்கப்படுகிறது.
3-ம் வகுப்பு ஏ.சி. வசதிக்கு ரு.3,155 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு வழக்கமான கட்டணம் ரூ.815 ஆகும்.
2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கைக்கு ரூ.4450 வரை வசூலிக்கப்படுகிறது. இதன் வழக்கமான கட்டணம் ரூ.1150.
இதே போல 13-ந்தேதி திருநெல்வேலி செல்லும் சுவிதா சிறப்பு ரெயிலிலும் பல மடங்கு கட்டணம் அதிகமாக உள்ளது. 2-ம் வகுப்பு படுக்கைக்கு ரூ.1315-ம், 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கைக்கு ரூ.2510-ம், 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கைக்கு ரு.3550-ம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் சென்னையில் இருந்து கோவைக்கு 12-ந் தேதி விமானத்தில் பயணம் செய்ய ‘எக்கனாமிக்’ கட்டணம் ரூ.2600 வசூலிக்கப்படுகிறது. இது ரெயிலில் 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி கட்டணத்தை விட ரூ.1000 குறைவாகும்.
விமான கட்டணத்தை மிஞ்சும் அளவிற்கு சுவிதா ரெயில் கட்டணம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரெயிலை விட பயண நேரம் பல மணி நேரம் விமானத்தில் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் தற்போது விமான பயணத்தை நாடிச் செல்கின்றனர்.
தூத்துக்குடி, மதுரை, கோவை நகரங்களுக்கு இப்போது பயணிகள் அதிகளவு விமான பயணத்தை தொடங்கி விட்டனர்.
ஏழை, எளிய மக்கள் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் முன்பெல்லாம் பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. ஆனால் இப்போது வணிக ரீதியில் லாப நோக்கத்தோடு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதால் மக்கள் அதில் பயணம் செய்யவே தயங்குகிறார்கள்.
முன்பதிவு செய்யப்படாத ரெயில்களிலும், அரசு பஸ்களிலும் பயணத்தை தொடரும் நிலை உள்ளது.
தற்போது நெருக்கடியான சூழலில் கூட லாப நோக்கத்தில் தான் அதிகளவு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சாதாரண சிறப்பு ரெயில்களை அதிகளவு இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். #TamilNews