கோவை:
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பாகவும், இந்து அமைப்புகள் சார்பாகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை ஆத்துபாலம் பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களது போராட்டம் இன்று 21-வது நாளாக நீடிக்கிறது. இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்து அமைப்புகள் சார்பில் கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் கடந்த 2-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முதல்நாளிலேயே இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
கடந்த 4-ந்தேதி காந்திபுரத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த்(33) என்பவர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் போத்தனூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டது தெரிய வந்ததும் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் பதட்டம் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே 5-ந்தேதி அதிகாலை கணபதி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தீ வைக்காமல் வீசப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மசூதி நிர்வாகிகள் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கோவை ரத்தினபுரியை சேர்ந்த 44-வது வார்டு பா.ஜ.க. நிர்வாகி சடையாண்டி(41), விசுவ இந்து பரிசத் ரத்தினபுரி பகுதி செயலாளர் அகில்(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் மேலும் சில இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், மொபட் மற்றும் பெட்ரோல் குண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கோவை ராம்நகர் ரங்கே கோனார் வீதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கிடந்தது. தீ வைக்காமல் பாட்டில் வீசப்பட்டதால் சுவர் மீது பெட்ரோல் சிதறி காணப்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் மாநகர துணை கமிஷனர் பாலாஜிசரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்ததும் ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர் பாளையத்தை சேர்ந்தவர் முகமது இக்பால்(52). இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும் ராம்நகர் பகுதியில் டயர் கடையும் நடத்தி வருகிறார். நேற்று மதியம் முகமது இக்பால் அருகில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கும்பல் உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் முகமது இக்பாலை தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த முகமது இக்பால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
முகமது இக்பால் தாக்கப்பட்ட தகவல் தெரியவந்ததும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பதட்டம் நிலவியது. அப்போது ஆஸ்பத்திரியில் சந்தேகத்துக்கிடமளிக்கும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து தாக்கினார்கள். பின்னர் அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த தாக்குதலை கண்டித்து உக்கடத்தில் எஸ்.டி. பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டுப்பாளையத்தில் சாலைமறியல் செய்தனர். மேலும் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த முகமது இக்பாலை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது இக்பாலை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் கடந்த சில நாட்களாக இஸ்லாமியர்கள் மீது தொடர் தாக்குதல் சம்பவம் நடைபெற்று உள்ளன. இது தொடரக்கூடாது. பதட்டத்தை ஏற்படுத்துபவர்கள் மீது போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்பால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அமைதி பூங்காவாக இருக்கும் கோவையை கலவர பூமியாக மாற்ற சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர். போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முகமது இக்பால் நேற்று இரவு மேல்சிகிச்சைக்காக சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரு தரப்பினரிடையே நடந்து வரும் மோதல் காரணமாக பதட்டம் நிலவி வருகிறது. இதையடுத்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி மேற்பார்வையில் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்கள், பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் பதட்டமான பகுதிகளில் 1200 போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய 300 மத்திய அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு முழுவதும் மாநகரில் 50 இடங்களில் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர். மேலும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.