சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு சிறப்பு தேர்தல் அதிகாரியாக விக்ரம்பத்ரா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதிகாரி விக்ரம்பத்ரா ஆர்.கே.நகர் தொகுதியை கடந்த சில தினங்களாக ஆய்வு செய்தார். இதேபோல் தேர்தல் பார்வையாளர்களும் தொகுதி நிலவரங்களை ஆய்வு செய்து வந்தனர்.
கடுமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சிறப்பு அதிகாரி விக்ரம்பத்ரா இன்று திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் தயாரித்த அறிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அவர் சமர்ப்பிக்கிறார்.
அதிகாரியின் திடீர் டெல்லி பயணம் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ என்ற பரபரப்பு நிலவுகிறது.
கடந்த முறையும் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு இரவில்தான் தேர்தல் ரத்து பற்றிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதேபோல் இந்த முறையும் கடைசி நேரத்தில் அதிகாரி டெல்லி விரைந்து இருப்பதால் தேர்தலை ரத்து செய்யலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.