புதுடெல்லி:
மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கு ஆதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணை பலமாக இருப்பதாக தமிழகம் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கேரளாவோ அணை பலமிழந்து இருப்பதாக கூறி வருகிறது.
இந்த நிலையில், 180 வயதான முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச நிபுணர் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும், முல்லைப்பெரியாறு அணை காலாவதியாகும் பட்சத்தில் எந்த மாநிலம் புதிய அணையை கட்ட வேண்டும் என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேரளாவை சேர்ந்த ரசல் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரின் அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது. இதில் மனுதாரர் தரப்பில் வக்கீல் மனோஜ் வி.ஜார்ஜ் ஆஜராகி வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரணிய பிரசாத் மற்றும் வக்கீல் ஜி.உமாபதி ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டின் 2014-ம் ஆண்டு தீர்ப்பை மேற்கோள் காட்டி, அணை பாதுகாப்பாக இருப்பதால் இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என்று தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-
அணையின் பாதுகாப்பு தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்யவோ ஆயுட்காலத்தை முடிவு செய்யவோ புதிதாக சர்வதேச குழுவை அமைக்கத் தேவையில்லை. பொதுமக்கள் மத்தியில் நிலவும் தேவையற்ற அச்சத்தை போக்கும் வகையில் அணை தொடர்பாக பேரிடர் மேலாண்மை குழுவை அமைக்கலாம்.
ஏதேனும் இயற்கை பேரிடர்கள் அல்லது அசம்பாதவிதங்கள் நிகழும் பட்சத்தில் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதற்காக மத்திய அரசும், தமிழக-கேரள அரசுகளும் தனித்தனியாக பேரிடர் மேலாண்மை குழுக் களை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஆனால் அணையின் பாதுகாப்பு மற்றும் ஆயுட்காலம் குறித்து கடந்த 2014-ம் ஆண்டு அமைத்த கண்காணிப்பு குழுவே ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை குழுக்கள் தங்களுக்குள் அல்லது வெளியில் எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #tamilnews