தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23-ந்தேதி, அடுத்த மாதம் 7 மற்றும் 14-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடத்தப்பட உள்ளன. சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என பார்த்து அறிந்து கொள்ளலாம்.
18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் ‘8ஏ’ வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
"நேஷனல் ஓட்டர்ஸ் போர்ட்டல்" வழியாகவும் tn.election.gov.in என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர் தலைமை அலுவலகராகவும் அவருக்கு கீழ் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு ஊழியர் வீதம் செயல்படுவார்கள் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.