செய்திகள்

மீனவர்கள் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. கண்டனம்

மீனவர்கள் போராட்டத்தை (காசிமேடு) தி.மு.க. தூண்டி விட்டது என்று பச்சை பொய்யை அவிழ்த்து விடும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. மீனவர் அணி செயலாளர் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மீனவர்கள் போராட்டத்தை (காசிமேடு) தி.மு.க. தூண்டி விட்டது என்று பச்சை பொய்யை அவிழ்த்துவிட்டு, “ சீன என்ஜின்களை பொருத்தக் கூடாது” என்று தங்கள் வாழ்வாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எதிர்த்து போராடிய மீனவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு தி.மு.க. சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டத்தை தூண்டிவிட்டு அரசியல் பண்ணும் அற்ப புத்தி அமைச்சர் ஜெயக்குமார் போன்றோருக்கு வேண்டுமானால் இருக்கலாம். தி.மு.க.வுக்கோ, மு.க.ஸ்டாலினுக்கோ துளியும் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உணர்வுரீதியாக தங்கள் உரிமைகளுக்காக போராடிய மீனவர்களை பார்த்து, பணம் பெற்றுக்கொண்டு போராடுகிறார்கள் என்று அபத்தமான குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார். இப்படி மீனவர் சமுதாயத்தை இழிவுப்படுத்தியதற்காக அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் பதவி ஏதோ “பரமசிவன் கழுத்து பாம்பு” என்று நினைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலினையும், தி.மு.க.வையும் சீண்டி பார்ப்பதை இத்தோடு அமைச்சர் ஜெயக்குமார் கைவிட வேண்டும்.