செய்திகள்

சபாநாயகர் நோட்டீசுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆஜர் ஆகவில்லை: சஸ்பெண்டு நடவடிக்கை பாயுமா?

சபாநாயகர் தனபால் நோட்டீசுக்கு தினகரன் ஆதரவு எம். எல்.ஏ.க்கள் இன்று நேரில் ஆஜராகாததால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று சசிகலாவின் உறவினர் டி.டி.வி. தினகரன் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அவருக்கு வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22-ந்தேதி அந்த 19 எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். அதில் அவர்கள், “முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அவரை மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது கட்சிக்கு விரோதமான செயல் என்று எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறிய அந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் மனு அளித்தார்.

சபாநாயகர் தனபால் அதை ஏற்று, அந்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். 7-ந்தேதி தன் முன் ஆஜராக கூறினார். ஆனால் ஆஜராவதற்கு 15 நாட்கள் கால அவகாசம் தரவேண்டும் என்று 19 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. தன் முன்பு நேரில் ஆஜராக ஒருவாரம் அவகாசம் அளிப்பதாகவும், 14-ந்தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் 19 எம்.எல்.ஏ.க்களில் ஜக்கையன் என்ற எம்.எல்.ஏ. தினகரன் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறினார். இதனால் மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் தினகரனை ஆதரிக்கும் அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் முதலில் புதுச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பிறகு அவர்கள் மைசூர் அருகே உள்ள கூர்க் பகுதி யில் இருக்கும் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இன்று காலை வரை அவர்கள் அங்கிருந்து புறப்படவில்லை. எனவே 18 எம்.எல்.ஏ.க்களும் இன்று சபாநாயகர் முன்பு நேரில் ஆஜராகவில்லை.

இது தொடர்பாக தினகரன் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்செல்வன் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: இன்று சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பீர்களா?

பதில்: சபாநாயகரிடம் கால அவகாசம் கேட்டு கொடுத்த மனுவுக்கு இன்னும் எங்களுக்கு பதில் வரவில்லை. இதனால் நாங்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க நேரில் வரும் சூழ்நிலை இல்லை.

கே: நீங்கள் விளக்கம் அளிக்காவிட்டால் 19 எம். எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறதே?

ப: நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, நாங்கள் எல்லோரும் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சராக தேர்ந் தெடுத்தோம். பொதுச்செயலாளர் சசிகலா வழிகாட்டுதலின் பேரில் அவரை முதல்- அமைச்சர் ஆக்கினோம்.

ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு இரட்டை இலையை முடக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தையும், 10 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து கொண்டு பதவி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எடப்பாடியை முதல்-அமைச்சராக்கிய எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழக போலீசை வைத்து எங்களை மிரட்டுகிறார்கள். ஜெயலலிதாவின் வழியில் நடக்கிறவர்கள்தான் நாங்கள். சசிகலா, தினகரன் உத்தரவின்பேரில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தோம்.

கவர்னரிடம் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் கொடுத்தோம்.

அந்த கடிதத்திற்கு இதுவரை நடவடிக்கை இல்லை. அதுபோல கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை. அவர்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா?

ஆட்சியை கவிழ்க்க தயங்கமாட்டோம் என்று அண்ணன் தினகரன் கூறி இருக்கிறார். அவரது வழியில் ஆட்சியை கவிழ்க்க தயங்க மாட்டோம்.

துரோக செயல் புரிந்ததற்காக மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கர்நாடக போலீசில் மனு கொடுத்துள்ளோம். அவர்கள் தமிழக போலீசாருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளனர். விசாரணைக்கு வந்தால் தங்களிடம் தகவல் தெரிவித்துவிட்டுதான் வர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கே: தினகரன் இன்று குடகு மாவட்டத்துக்கு வந்து எம்.எல்.ஏ.க்களை சந்திக்கும் திட்டம் உள்ளதா?

ப: அதுபற்றி தகவல் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் ஆதரவு எம். எல்.ஏ.க்கள் இன்று நேரில் ஆஜராகாததால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 பேர் மீதும் எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி சபாநாயகர் தனபால் தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.