த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கூவத்தூரில் சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தபோது பணப்பேரம் நடைபெற்றதாகவும், இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தபட்டிருப்பதாகவும் வெளிவரும் செய்திகளும், அதன் அடிப்படையிலேயே ஆட்சி தொடர்கிறது என்றால் ஜனநாயகத்தில் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றது என்பதை வாக்களித்த வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. சட்டம் தன்னுடைய கடமையைச் செய்வதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது.
கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்ந்த பிரச்சனைகளும், குற்றச்சாட்டுகளும் நேரடியாக ஆட்சியாளர்களை பாதிக்கக்கூடிய வகையில் வெளிவந்திருக்கும்போது அதனை சட்டமன்றத்திலே நடுநிலையோடு கையாண்டு வாக்களித்த மக்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் தெளிவுப்படுத்த வேண்டியது சபாநாயகரின் கடமை. இதற்கு ஆளும் ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு நல்குதல் தான் நல்லது.
மேலும் ஆளும் ஆட்சியாளர்கள் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் இல்லாமல் மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்கின்றதென்றால் அது ஆட்சியாளர்களின் பலவீனத்தையே எடுத்துக் காட்டுகின்றது.
குறிப்பாக தமிழகத்தில் நிலுவையில் உள்ள முக்கியப் பிரச்சனைகளான விவசாயிகள் கோரிக்கைகள், மீனவர்கள் பிரச்சனை, போக்குவரத்து தொழி லாளர்கள் கோரிக்கைகள், தடுப்பணை பிரச்சனைகள், தண்ணீர் தட்டுப்பாடு, மதுக்கடைகளை மூடுதல், பாலில் கலப்படம் மற்றும் பிளாஸ்டிக் அரிசி போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி அதற்கான உரிய தீர்வு காண்பதற்கு நடைபெறுகின்ற சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு மானியக் கோரிக்கைககள் மீது எதிர்கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து, ஜனநாயக ரீதியாக சட்டமன்றத்தை முறையாக நடத்திட வேண்டும். மேலும் ஆட்சி, அதிகாரத்தில் எந்தவித குழப்பமும், பாதிப்புமும் ஏற்படாமல் மக்களுக்கான பணிகளை தங்கு, தடையின்றி மேற்கொள்ள வேண்டியது தான் தமிழக அரசின் பணியாக இருக்க வேண்டும்.