சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் எனவே அவருக்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் கடிதம் கொடுத்தனர்.
18 எம்.எல்.ஏ.க்களின் இந்த செயல், கட்சி கட்டுப்பாட்டை மீறியது என்று அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி இழப்பு செய்து அறிவித்தார்.
இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர், ‘‘ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது, கட்சிக்கு எதிராக நடந்து கொண்டனர். ஆனால் அவர்கள் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்று குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதை ஏற்று சபாநாயகர் தனபால் பதில் மனு அளித்துள்ளார்.
அவர் சார்பில் சட்டசபை செயலாளர் பூபதி சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் தெரிவித்துள்ளார். அந்த விளக்கக் குறிப்பில் சபாநாயகர் தனபால் கூறி இருப்பதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தையும் டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் ஒப்பிட இயலாது. இந்த இரண்டு விவகாரங்களும் முற்றிலும் மாறுபட்டவை.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான விசாரணை தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை மனு கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டது. எனவே சபாநாயகர் அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்பதை ஏற்க இயலாது.
தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்ளும் கட்சியில் தொடர்ந்து நீடிக்க விரும்பி இருந்தால், அவர்கள் கட்சி அமைப்பிடம் அணுகியிருக்க வேண்டும். அல்லது தங்கள் குறைகளை தீர்க்க சட்டப்பிரிவை நாடி இருக்க வேண்டும்.
அதை விடுத்து அவர்கள் 18 பேரும் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்ததை ஏற்றுக் கொள்ள இயலாது. அ.தி.மு.க. கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு அவர்கள் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.
இதன் மூலம் அவர்கள் தாமாகவே கட்சியில் இருந்து தங்களை துண்டித்துக் கொண்டனர். அவர்களது இந்த நடத்தையால் அவர்கள் தாமாக தங்கள் உறுப்பினர் தகுதியை சரண்டர் செய்து விட்டனர்.
இதனால்தான் அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகுதி இழப்பு செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தாங்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் உரிய கால அவகாசம் தரவில்லை என்று கூறியுள்ளனர். விதிகளின் படி எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்தால் கூட போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களும் உரிய விளக்கம் அளிக்க சபாநாயகர் 21 நாட்கள் கால அவகாசம் கொடுத்தார். 2 தடவை நேரில் ஆஜராக தேதி நிர்ணயம் செய்து தகவல் கொடுத்தார்.
ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களும் நேரில் வந்து ஆஜராகவில்லை. எனவேதான் அவர் கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த விளக்கத்தில் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.