மேட்ரிட்:
ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதற்கான பிரகடனம், கேட்டலோனியா பிராந்திய பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சூட்டோடு சூடாக அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த கார்லஸ் அரசை ஸ்பெயின் அரசு பதவியில் இருந்து அகற்றியது. கேட்டலோனியா, ஸ்பெயின் அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கார்லஸ், தனது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த பலருடன் பெல்ஜியத்தில் உள்ளார். அதே நேரத்தில் அங்கு தான் அரசியல் புகலிடம் கேட்க செல்லவில்லை என்று கூறினார். இந்த நிலையில் அவர் மீதும், பதவி நீக்கம் செய்யப்பட்ட 13 மந்திரிகள் மீதும் தேசத்துரோகம், கிளர்ச்சி, அரசு நிதியை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர்கள் இந்த வாரம் நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் நீதிமன்ற விசாரணை, நேர்மையாக நடைபெறும் என வாக்குறுதி வழங்கினால் மட்டுமே தான் ஸ்பெயின் திரும்ப முடியும் என கார்லஸ் தெரிவித்திருந்தார். அதோடு அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். அவரோடு நான்கு மந்திரிகளும் பெல்ஜியத்திலேயே இன்னும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பெல்ஜியத்தில் தங்கியுள்ள கார்லஸ் மற்றும் நான்கு மந்திரிகளை கைது செய்ய ஸ்பெயின் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். இந்த தகவலை கார்லசின் பெல்ஜிய வழக்கறிஞர் பால் பெக்கெர்ட் தெரிவித்தார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர்களை பெல்ஜியத்தில் இருந்து வெளியேற்றுமாறு ஸ்பெயின் சார்பில் அந்நாட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்படும். ஆனால் பெல்ஜிய அரசிடம் கார்லஸ் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளதால் அவர் அங்கேயே தொடர்ந்து தங்கி இருப்பார் எனவும் அவர் கூறினார்.
ஏற்கனவே கேட்டலோனியாவில் இருந்த 9 மந்திரிகளை ஸ்பெயின் அரசு சிறையில் அடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.