பாப் பாடகி கூ ஹரா 
செய்திகள்

தென்கொரியாவில் பிரபல பாப் பாடகி மர்ம சாவு

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கூ ஹரா தலைநகர் சியோலில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கிடந்தார். இந்த மர்ம சாவு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

சியோல் :

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கூ ஹரா (வயது 28). இவர், சர்வதேச அளவில் பிரபலமான, பெண்களை மட்டுமே கொண்ட ‘காரா’ என்ற பாப் இசைக்குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்த இசைக்குழுவின் சார்பில் பல்வேறு நாடுகளில் நடந்த இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு பாப் பாடல்களை பாடி பிரபலமானார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, தாமாகவே பாடல்களை வெளியிட்டு வந்தார். இதனால் இவருக்கு தென்கொரியாவில் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கூ ஹராவை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முன்னாள் காதலர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாக கூ ஹரா போலீசில் புகார் அளித்தார்.

இந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கூ ஹரா இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். கடந்த மே மாதம் அவர் தற்கொலைக்கு முயன்று, கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார். அதன் பிறகு தனது ரசிகர்கள் அளித்த ஆதரவு மற்றும் உற்சாகத்தால் அதில் இருந்து மீண்டு வந்த கூ ஹரா தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வந்தார். இந்த நிலையில், தலைநகர் சியோலில் உள்ள அவரது வீட்டில் கூ ஹரா பிணமாக கிடந்தார். இந்த மர்ம சாவு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கூ ஹரா எப்படி இறந்தார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கூ ஹராவின் நெருங்கிய தோழியும், சக பாப் பாடகியுமான சுல்லி, கடந்த மாதம் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தது குறிப்பிடத்தக்கது.