தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 
செய்திகள்

தென் கொரியா பாராளுமன்ற தேர்தல்- கொரோனா அச்சத்திற்கு மத்தியில் ஆளுங்கட்சி அமோக வெற்றி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தென் கொரியாவில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

மாலை மலர்

சியோல்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 21 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.35 லட்சம் மக்கள் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக முக்கிய தொழில்கள் முடங்கி பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும், தென்கொரியாவில் சமூக விலகல் உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. வாக்களிக்கும்போது வாக்காளர்கள் முக கவசம், கையுறைகள் அணிந்து வந்ததுடன் சமூக விலகலை கடைப்பிடித்தனர். வாக்காளர்களின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது.

கொரோனா அச்சத்தால் மக்கள் வாக்களிப்பதற்கு வரமாட்டார்கள் எனக் கருதிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், ஏராளமான இளைஞர்கள் வாக்களித்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

18 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த தேர்தலில் அதிகபட்சமாக 66 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 

பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஜனநாயக கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 300  தொகுதிகளில், ஜனநாயக கட்சி 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கிளை கட்சியான பிளாட்பார்ம் கட்சி 17 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் 180 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. 

பாராளுமன்றத் தேர்தலில் 35 கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கியபோதும், ஜனநாயக கட்சிக்கும், யுனைடெட் பியூச்சர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது. யுனைடெட் பியூச்சர் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 103 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி மாதத்தில் அதிபரின் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. பொருளாதார மந்தநிலை,  வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைகள் முடக்கம் மற்றும் அரசியல் ஊழல்கள் தொடர்பாக அடுத்தடுத்து வெளியான செய்திகளால் அரசுக்கான ஆதரவு குறைந்திருந்தது.

அதன்பின்னர், கொரோனா வைரசை அரசாங்கம் கட்டுப்படுத்திய விதம் பிரசாரத்தில் எதிரொலித்தது. பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு 900 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கைகளால் தினசரி தொற்று எண்ணிக்கை 30-க்கும் கீழ் குறைந்தது. இந்த நடவடிக்கைகளை ஜனநாயகக் கட்சி தனது பிரச்சாரத்தின் மையமாக வைத்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.