செய்திகள்

தென்கொரியாவில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து 13 பேர் பலி

தென்கொரியாவில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் படகில் சென்ற 13 பேர் பலியாகியுள்ளனர்.

மாலை மலர்

தென்கொரியாவில் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த படகில் 2 மாலுமிகள் உள்பட 22 பேர் இருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த எரிபொருள் நிரப்பும் கப்பல் மீது மீன்பிடி படகு எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்த படகு நீரில் கவிழ்ந்து மூழ்கியது.

இது குறித்து உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் 13 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடற்படைக்கு சொந்தமான 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் 19 கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.