செய்திகள்

சபரிமலை நடை திறப்பு: இன்று மாலை தென்னிந்திய முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தென்னிந்திய முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடக்கிறது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாநில அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் இணைந்து செய்து உள்ளன. இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதற்கிடையில் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் தென்மாநில முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா, கர்நாடகா முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். சபரிமலை வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு நேற்று காலையே திருவனந்தபுரம் வந்துவிட்டார். அவர் தனது மனைவியுடன் திருவனந்தபுரம் அருங்காட்சியகம், அரண்மனை, மிருககாட்சி சாலை மற்றும் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தார். கோவளம் கடற்கரைக்கு சென்றும் அதன் அழகையும் ரசித்தார்.