சென்னை:
பஸ் ஊழியர்கள் சம்பள உயர்வு, நிலுவை தொகை கேட்டு கடந்த 4-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இன்னும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
கோரிக்கைகள் நிறை வேறும் வரை ‘ஸ்டிரைக்’ நீடிக்கும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுபற்றி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறியதாவது:-
பஸ் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களை விட சம்பளம் குறைவாக உள்ளது. சுருக்கமாக கூறினால் போக்கு வரத்து துறை அமைச்சரின் கார் டிரைவருக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட பஸ் டிரைவர்களின் சம்பளம் குறைவாகும்.
அந்த டிரைவருக்கு நிகராக பெரிய பஸ்சை ஓட்டும் டிரைவர்களுக்கும் சம்பளம் நிர்ணயிங்கள் என்றுதான் கேட்கிறோம். இதை ஏற்க முடியாதா?
இனி ஒரு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கூறுவதில் நியாயம் இல்லை. துரோகமாக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யும் பணத்தை அந்தந்த மாதமே வங்கி கணக்கில் செலுத்தாமல் இருக்கிறார்களே இது நியாயமா?
முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு இப்படி நடந்து கொள்வது சரிதானா? ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை வருடக்கணக்கில் கொடுக்காமல் இருக்கிறார்களே இது எந்த வகையில் நியாயம்?
தங்களுக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் பணம் கிடைக்காததால் பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர் கடன் வாங்கி கஷ்டப் படுகின்றனர். வறுமையில் வாடுகின்றனர்.
7 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள நிலுவைத் தொகையை தொழிலாளர்களுக்கு தராமல் அரசு வைத்துக் கொண்டிருப்பதை எப்படி பெற்றுக் கொள்ள முடியும்.
நாங்கள் நியாயத்தின் பக்கம் இருந்து போராடுகிறோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம். எங்கள் போராட்டம் நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.