செய்திகள்

தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.கவினர் மீது சட்டபூர்வ நடவடிக்கை - சோபியா தந்தை

தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மீது கொடுத்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்று மாணவி சோபியாவின் தந்தை கூறியுள்ளார். #sophiaantipolis

மாலை மலர்

தூத்துக்குடி:

ஆராய்ச்சி மாணவி சோபியாவின் தந்தை டாக்டர் சாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது மகள் சோபியா கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். கடந்த 30-ந்தேதி சோபியா சென்னை வந்தார். நானும், எனது மனைவியும் சென்னையில் இருந்து எனது மகளை அழைத்துக்கொண்டு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தோம்.

விமானத்தில் இருந்து இறங்கும்போது எனது மகள் பா.ஜ.க அரசை கண்டித்து முழக்கமிட்டார். இதனை கேட்ட பா.ஜ.க தலைவர் தமிழிசை அப்போது எதுவும் சொல்லாமல் விமான நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்துக்கு வந்ததும் தனது கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து அவதூறாக பேசி மிரட்டினார்கள்.

எனது மகள் மீது காவல்துறை 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவளுக்கு வயிற்றுவலி என்பதால் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

மேலும், பா.ஜ.க வினர் மீது நாங்கள் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. புகார் கொடுத்ததற்கான ரசீதும் கொடுக்கவில்லை. எனவே இதுபற்றி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது வக்கீல் அதிசய குமார் உடனிருந்தார். #Sophia #sophiaantipolis