செய்திகள்

நம்பர் பிளேட் பொருத்திய கார்கள் இனி விற்பனைக்கு வரும் - மத்திய மந்திரி நிதின்கட்காரி தகவல்

கார்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் விரைவில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களின் உரிம எண்கள் அடங்கிய நம்பர் பிளேட்டுகளை அங்கீகாரமளிக்கப்பட்ட அமைப்புகளிடம் இருந்து மாநிலங்கள் கொள்முதல் செய்கின்றன. நம்பர் பிளேட்டுகளில் இடம்பெற வேண்டிய எண்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வழங்குகின்றன.

இந்தநிலையில் நம்பர் பிளேட் நடைமுறை தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறியதாவது:-

கார்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் விரைவில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும். நம்பர் பிளேட்டுகளின் விலை வாகனங்களின் விலையில் சேர்க்கப்படும். வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அவற்றில் நம்பர் பிளேட்டுகளை பொருத்தி விடும். அதில் எண்களை பொறிக்கும் பணி பின்னர் எந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

நம்பர் பிளேட்டுகளின் விலை வாகனத்தின் விலையில் சேர்க்கப்படும். இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நம்பர் பிளேட்டுகளால் நுகர்வோருக்கு அலைச்சல் குறைவதோடு நம்பர் பிளேட்டுகளில் சமச்சீரான தன்மையும் ஏற்படும்.

தற்போது மாநிலங்கள் கொள்முதல் செய்யும் நம்பர் பிளேட்டுகளின் விலை ரூ.800 முதல் ரூ.40 ஆயிரம் வரை உள்ளது.

வாகனங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம். விலைகுறைந்த வாகனங்களாக இருந்தாலும், ஆடம்பர வாகனங்களாக இருந்தாலும் பாதுகாப்பு அம்சங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது. பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்.

வாகனங்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தும் வி‌ஷயத்திலும் சமரசத்துக்கு இடமில்லை. மாசு கட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு தயாரிக்கப்படும் கார்களில் டிரைவர்களின் பாதுகாப்புக்காக காற்றுப் பைகள், சீட்பெல்ட் அணிய வேண்டியதை நினைவுபடுத்தும் கருவி, மணிக்கு 80 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் எச்சரிக்கும் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும்.