புதுடெல்லி:
மோடி அரசின் அடக்குமுறைக்கு காங்கிரஸ் அடி பணியாது என்று சோனியா காந்தி கூறினார்.
டெல்லியில் நேற்று தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மோடி அரசை ஆவேசமாக தாக்கிப் பேசினார். அவர் கூறியதாவது:-
மோடி அரசு சர்வாதிகார போக்குடனும், திமிராகவும் செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்துடன் அடக்குமுறைகளை ஏவி விடுகிறது. பொய்யான வழக்குகளை தொடுக்கிறது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு காங்கிரஸ் கடந்த காலத்திலும் அடி பணிந்தது இல்லை. எதிர்காலத்திலும் அடிபணியாது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, அனைவரும் ஒருங்கிணைவோம், அனைவரும் வளர்ச்சி காண்போம், ஊழலை ஒழிப்போம் என்றெல்லாம் கோஷங்களை எழுப்பினார். ஆனால் அவையெல்லாம் வெற்று வாக்குறுதிகள் என்பதையும், ஓட்டுகளை பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான தந்திரங்கள் என்பதையும் மக்கள் இப்போது உணர்ந்துவிட்டனர்.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் பொருளாதாரம் மலர்ச்சி கண்டது. வறுமையின் பிடியில் இருந்த பல லட்சக்கணக்கான மக்களை அதில் இருந்து விடுவித்தது. ஆனால், மோடி அரசின் கொள்கைகளால் நாடு பலவீனப்பட்டு விட்டது.
மோடி அரசின் அடக்கு முறைக்கு எதிரான சவால் களை சந்திப்பதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும். அவர்களின் அதிகார மமதையை ஒடுக்கவேண்டும். மோடி அரசின் ஊழல்களை தொடர்ந்து ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவோம்.
காங்கிரஸ் மக்களுக்கு ஆதரவாக இருக்கும். அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும். நம்முன்பாக உள்ள அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடவேண்டும். நாட்டை வெறுப்பு அரசியலில் இருந்து விடுவிக்கவேண்டும். எனவே இதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். நமது தனிப்பட்ட பிரச்சினைகளை கவனிப்பதற்கான நேரம் அல்ல. கட்சியின் வெற்றிதான் மிக முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல் பற்றி முறைமுகமாக குறிப்பிட்ட சோனியா காந்தி, “40 ஆண்டுகளுக்கு முன்பு சிக்மகளூரு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இந்திராகாந்தி எதிர்க்கட்சியினர் அனைவரும் அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக வெற்றி கண்டார். இதனால் இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. அதே போன்ற வெற்றியை நமது கட்சிக்கு பெற்றுத்தர வேண்டும்” என்றார். #Congress #SoniaGandhi #Tamilnews