புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பவர் சோனியா காந்தி. உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடைசியாக சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை நேற்று பாதிப்பு அடைந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வயிற்றுப்போக்கு காரணமாக அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை 4 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், சில நாட்களாவது வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.