செய்திகள்

மோடி அரசு தவறான வழியில் செயல்படுகிறது: சோனியாகாந்தி கடும் தாக்கு

‘மோடி அரசு தவறான வழியில் செயல்படுகிறது’ என சோனியா காந்தி கடுமையாக தாக்கினார்.

மாலை மலர்

நேரு தொடங்கிய ‘நே‌ஷனல் ஹெரால்டு’ என்ற பத்திரிகை காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படுகிறது. அந்த பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கவிழா நேற்று டெல்லியில் நடந்தது.

அதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.

கடந்த வாரம் டெல்லி அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக கூறி ரெயிலில் 16 வயது முஸ்லிம் சிறுவன் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டான். மாட்டு இறைச்சி தொடர்பாக இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

அதுகுறித்து விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். அப்போது மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான மோடி அரசை பெயர் குறிப்பிடாமல் தாக்கினார். அவர் பேசியதாவது:-

‘நாட்டில் உள்ள தீய எண்ணம் கொண்ட சக்திகள் சகிப்புத் தன்மைக்கு எதிரான கேள்வி எழுப்புகின்றனர். இந்தியர்கள் இதை (மாட்டு இறைச்சி) சாப்பிட முடியாது. அவர்கள் நேசிக்க முடியாது. அவர்கள் பேசக் கூடாது. அவர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாது என்பன போன்ற சூழ்நிலைகளை உருவாக்கி வருகின்றனர்.

இதுபோன்ற கடுமையான சவால்களை நாடு எதிர் கொண்டுள்ளது. நாட்டில் தவறான ஆட்சி நடக்கிறது. இப்பிரச்சினைகள் குறித்து நாம் பேசாமல் வாய்மூடி மவுனமாக இருந்தால் ஆட்சியாளர்களின் நடவடிக்கைக்கு சம்மதம் தெரிவித்தது போல் ஆகி விடும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

விழாவில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.