செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி சந்தோஷ் மோகன் தேவ் மரணம்: சோனியா இரங்கல்

காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சந்தோஷ் மோகன் தேவ் இன்று காலை காலமானார். அவரது மரணத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ் மோகன் தேவ் (83). முன்னாள் மத்திய மந்திரியான இவர். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் சந்தோஷ் மோகன்தேவ் இன்று காலை அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

இவர், மன்மோகன்சிங் முதல்முறையாக பிரதமராக இருந்த மந்திரி சபையில் கனரக தொழில்துறை மந்திரியாக இருந்தார். 3 முறை அவர் மத்திய மந்திரியாக இருந்துள்ளார். 1986-89 வரை இணை மந்திரியாகவும், 1991-ல் ராஜாங்க மந்திரியாகவும் இருந்துள்ளார்.

சந்தோஷ் மோகன் தேவ், முதலில் 1980-ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தின் சில்சார் தொகுதியிலிருந்து ஐந்து முறையும், திரிபுராவில் இருந்து இரண்டு முறையும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு பிதிகா தேவ் என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர்.

இதற்கிடையே, மத்திய மந்திரி சந்தோஷ் மோகன் தேவ் மரணத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர். அவரது அயராத சேவையால் என்றும் நினைவு கூரப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT