சரக்கு மற்றும் சேவை வரி என்று கூறக்கூடிய ஜி.எஸ்.டி. கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இப்புதிய வரிவிதிப்பின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும் என்றும், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் வியாபாரிகள் அவரவர் இஷ்டத்துக்கு வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழை மக்கள் அதிகளவு பயன்படுத்தக் கூடிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது.
பால், பழம், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்த, சில்லரை வியாபாரிகள் பொத்தாம் பொதுவாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் பட்டுள்ளதால் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது என்று கூறி பொது மக்களிடம் வழக்கத்தை விட கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் வரி வசூலிக்கிறார்கள். ஜி.எஸ்.டி. வரி விதிப்புமுறை அமலுக்கு வந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் குழப்பம் தீரவில்லை. பல்வேறு தொழில்களை செய்கின்ற வர்த்தக பிரமுகர்கள் ஜி.எஸ்.டி. வரி எப்படி ஒரு பொருளுக்கு விதிக்க வேண்டும் என்று தெரியாமல் அவரவர் இஷ்டத்துக்கு வசூலிக்கிறார்கள். இது பொது மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்ட சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) ஆகியவை நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த விவரம் கூட தெரியாமல் வியாபாரிகள் ஜி.எஸ்.டி.யுடன் வாட் வரியும் சேர்த்து பில் செய்கிறார்கள். வியாபாரிகள் சிலர் ஏற்கனவே இருப்பு வைத்துள்ள பொருட்களுக்கு வாட்டுடன் ஜி.எஸ்.டி. வரியையும் சேர்த்து வசூலிக்கிறார்கள்.
ஒரு சிலர் முறையாக பில் தருவதில்லை. பொதுமக்கள் கேட்டாலும் கூட சாதாரண துண்டு சீட்டுகளிலும், நிறுவனங்கள், ஓட்டல்களின் பெயர் விவரம் எதுவும் இல்லாமல் வரியை மட்டும் வாங்கும் பொருட்களின் விலையோடு சேர்த்து பில் செய்து வசூலிக்கின்றனர்.
முறையான பில், வழங்காமல் பெயரளவிற்கு ஏதோ ஒரு துண்டு சீட்டை கொடுத்து ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கின்றனர். பேக்கரிகளிலும், பழச்சாறு விற்பனை மையங்களிலும் இது போன்ற நிலை காணப்படுகிறது.
ஜி.எஸ்.டிக்கு பிறகு புதிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் பழைய முறையிலேயே பலர் வியாபாரம் செய்கின்றனர். பழைய சரக்குகளை ஜி.எஸ்.டி.யுடன் வாட் வரியை சேர்த்து வசூலிக்கிறார்கள். ஈகா தியேட்டர் அருகில் உள்ள ஒரு பழக்கடையில் ஜூஸ் குடித்த வாலிபருக்கு 2 சதவீத வாட்வரியும், 6 சதவீத சேவையும் பழைய முறையில் வசூலிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் பொருட்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு பில்லில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.யை ஈடு செய்வதற்காக இந்த தள்ளுபடி வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரியாணி ஓட்டல்களில் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். ஒரு சில வியாபார நிறுவனங்கள் ஏற்கனவே இருப்பு வைத்துள்ள பொருட்களை ஜி.எஸ்.டி.க்கு மாற்றுவதற்கு சிரமப்படுகிறார்கள். தங்களது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய விலைகளை மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதோடு சிரமங்களும் உள்ளன. அதனால் ஜி.எஸ்.டி.யுடன் வாட் வரியையும் சேர்த்து வசூலிக்கிறார்கள்.
இதனால் விலை குறைக்கப்பட்ட பொருளுக்கும் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஜி.எஸ்.டி.யின் நோக்கம் நிறைவேறவும் அதனுடைய பலன் மக்களுக்கு சென்றடையவும் வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் இதனை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
தவறு செய்யும் நிறுவனங்கள் மீதும், வர்த்தகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் தான் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்று குடியிருப்பு நலச்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.