ஹவுரா:
மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் ராணுவத்தின் அசாம் ரைபிள் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் பக்னான் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கியிருந்தனர்.
இந்த முகாமில் தங்கியிருந்த லட்சுமிகாந்த் என்ற வீரர் நேற்று திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதில் குண்டு பாய்ந்ததில் போலோநாத் தாஸ் என்ற வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதில் ஈடுபட்ட லட்சுமிகாந்த், தனக்கு விடுப்பு கிடைக்காததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.