நீர்த்தேக்க தொட்டி - சூரிய ஒளி மின் உற்பத்திக்கான தகடுகள் 
செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் 100 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ‘சோலார்’ வசதி

திருவாரூர் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க வசதியாக 100 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ‘சோலார்’ வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்களின் அத்தியாவசிய தேவைகளாக சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் ஆகியவற்றை பட்டியலிடலாம். ஆனால் தாகத்தை தணிக்கும் குடிநீர் அடிப்படை தேவைகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து கிராமங்களிலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரம் இல்லாதபோது குடிநீர் வினியோகம் தடைபட்டால் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது. புயல், மழை போன்ற இயற்கை பேரிடரின்போது குடிநீர் வினியோகம் முற்றிலும் நின்று விடுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து தடையின்றி குடிநீர் கிடைக்க மின்சாரம் அத்தியாவசியமாகிறது.இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் எந்த இயற்கை இடர்பாடுகளாலும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவும், ஊராட்சிகளில் செலவை குறைக்கும் வகையிலும் ‘சோலார்’ (சூரிய ஒளி மின்சாரம்) வசதியை பயன்படுத்த ஊரக வளர்ச்சி முகமை திட்டமிட்டது.

அதன்படி முதல் கட்டமாக சி.எஸ்.ஆர். நிதியின் மூலமாக மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுடன் இணைக்கப்பட்ட மோட்டார்களை ‘சோலார்’ வசதி மூலம் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாங்குடி, அம்மையப்பன், முகந்தனூர், கமலாபுரம் உள்பட 40 இடங்களில் மேல்நிலை நீர் தொட்டிகளுக்கு ‘சோலார்’ வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் குடிநீருக்கான மின்சார கட்டணம் கனிசமாக குறைந்து வருவதாக ஊராட்சி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு இடத்தில் சோலார் வசதியை ஏற்படுத்த ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் செலவிடப்படுகிறது. 100 இடங்களில் மொத்தம் ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பில் சோலார் மின்சார வசதி செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஊரக வளர்ச்சி முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. குடிநீர் வினியோகத்தில் தன்னிறைவு பெறும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.