சென்னை:
ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மாதூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். கொலை மிரட்டல், வழிப்பறி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் உள்ளார்.
தமிழரசனின் மகன் சந்துரு (வயது 4), பாம்பு கடித்து இறந்தார். இறுதிச்சடங்கு செய்ய கணவரை ‘பரோலில்’ விடுவிக்க கோரி தமிழரசனின் மனைவி சித்ரா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மாலை அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் வழக்கை விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘தமிழரசனுக்கு ஒரு வாரம் பரோல் வழங்குகிறோம். அவர் தினமும் மாலை 6 மணிக்கு ஓரகடம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு அவர் சிறை கண்காணிப்பாளர் முன்பு ஆஜராகி, சிறைக்குள் செல்ல வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.