புதுடெல்லி:
பொது இடங்களில் புகைப்பிடித்த 3,000 பேரிடம் அபராதம் வசூலித்து வரும் டெல்லி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது என்ற தடை உத்தரவை அரசு எத்தனை முறை கொண்டு வந்தாலும் அதனை புகைப்பவர்கள் மதிப்பதாக தெரியவில்லை. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு எதிராக போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் 100 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 21,700 அபராதம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி போலீசார் பொது இடங்களில் புகைப்பவர்களை பிடித்து உடனே அபராதம் விதித்து வருகிறார்கள். புகையிலை விளம்பரங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கையை போலீஸ் எடுத்து வருகிறது.
கடந்த ஞாயிறன்று தொடங்கி இன்று வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 2,743 பேரிடம் இருந்து சுமார் 5.5 லட்சம் ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும்,
போலீசார் நடவடிக்கையை பாராட்டி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பாராட்டுதல்கள் குவிந்து வருகின்றன. #NoSmoking #PoliceFine #tamilnews