கைதானவர்களை படத்தில் காணலாம். 
செய்திகள்

கருப்பாயூரணியில் தூக்க மாத்திரை கலந்த பானத்தை கள் என ஏமாற்றி விற்பனை- 4 பேர் சிக்கினர்

போதைக்காக தூக்க மாத்திரை கலந்த பானத்தை கள் என ஏமாற்றி விற்பனை செய்த 4 பேர் மதுரையில் சிக்கினர்.

புதூர்: 

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் திருட்டுத்தனமான சாராய விற்பனை தமிழகம் முழுவதும் தலையெடுத்துள்ளது. மேலும் கள் விற்பனையும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை கருப்பாயூரணி வீரவாஞ்சன், ஓடைப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பி கள் விற்பதாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஓடைப்பட்டி கோமதிபுரம் பகுதியில் ராம்குமார், சேகர், மணிகண்டன், ஈஸ்வரன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள், பதநீரில் போதை மாத்திரை கலந்து புதிய பானம் தயாரித்து, அதனை ‘கள்’ என்று ஏமாற்றி விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தூக்க மாத்திரை கலந்த 130 லிட்டர் பானத்தை பறிமுதல் செய்தனர்.

இதே போல் கூடல்புதூர் பகுதியில் கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆனையூர் பகுதியை சேர்ந்த சிவராஜ், லட்சுமிகாந்தன், ஜெகன் என்பதும், அவர்கள் கள் இறக்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT