செய்திகள்

கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு: ஊதியக்குழு பரிந்துரை

கர்நாடகாவில் அரசு பணியாளர்களுக்கு 30 சதவீதம் சம்பளம் உயர்வு வழங்க வேண்டும் என 6-வது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா அரசால் ஏற்படுத்தப்பட்ட 6-வது ஊதியக்குழு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையை 6-வது ஊதியக்குழுவின் தலைவர் எம்.ஆர். ஸ்ரீவாச மூர்த்தி, தலைமை செயலர் ரத்ன பிரபா முன்னிலையில் சமர்பித்தார்.

அந்த அறிக்கையில் அரசு பணியாளர்களின் சம்பளத்தை 30 சதவீதம் உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வாங்குபவர்களை தவிர்த்து 5 லட்சத்து 20 ஆயிரம் அரசு பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், விருப்ப ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச அனுபவ ஆண்டை 15-லிருந்து 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். முழு ஓய்வூதியம் பெறும் அனுபவ ஆண்டை 33-லிருந்து 30-ஆக குறைக்க வேண்டும். இறந்த பின் வழங்கும் ஓய்வூதிய பணிக்கொடையை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது.