அகர்தலா:
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். இவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலரும் வாக்களித்துள்ளனர்.
அவ்வகையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி உத்தரவை மீறி பா.ஜ.க. வேட்பாளரான வெங்கையா நாயுடுவுக்கு வாக்களித்தனர். இந்நிலையில், இந்த ஆறு எம்.எல்.ஏ.க்களும் தனது ஆதரவாளர்களுடன் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தகவலை பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம் மாதவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ராம் மாதவ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஹிமந்தாபிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் தங்கள் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தனர்’.
இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.