செய்திகள்

பீகார் சர்க்கரை ஆலை விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி: உரிமையாளர் கைது

பீகாரில் சர்க்கரை ஆலையில் உள்ள பாய்லர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலியான சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலை மலர்

பாட்னா:

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் சாஸ்முசா நகரில் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள பாய்லர் புதன்கிழமை நள்ளிரவில் வெடித்தது. இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கு காயம் அதிக அளவில் இருந்ததால் அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆத்திரமடைந்த சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை வளாகத்தில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தனர். உரிமையாளர் வீட்டை தாக்கியதுடன், வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அந்த சர்க்கரை ஆலையின் உரிமையாளர் மெகமுத் அலியை கைது செய்தனர்.

இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.