வேலூர்:
காட்பாடியில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 6 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
காட்பாடியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஸ்டாலின் என்ற செல்வராஜ். கடந்த 10-ந்தேதி இரவு தாராபடவேடு வாரச்சந்தை அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை குறித்து காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், கோவில் நிலம் தொடர்பான பிரச்சினையில் செல்வராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் கொலையாளிகள் குறித்த முக்கிய விவரங்கள் கிடைத்தன. அவர்களின் இருப்பிடங்களை தேட ஆரம்பித்தனர்.
இதற்கிடையில், செல்வராஜ் கொலை தொடர்பாக தாராபடவேட்டை சேர்ந்த முருகன், தேவராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் வேலூர் 3-வது மாஜிஸ்திரேட் வெற்றி மணி முன்னிலையில் சரணடைந்தனர். பின்னர் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், செல்வராஜ் கொலை வழக்கில் தொடர்புடை பல முக்கிய குற்றவாளிகள் பழைய காட்பாடி பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
விசாரணையில் அவர்கள் தாராபடவேட்டை சேர்ந்த சுரேஷ் என்ற குருவி, பாலா, ரஹீம், மதன், முரளி மற்றும் ஓம் பிரகாஷ் என்று தெரியவந்தது. அவர்களிடம் கொலைக்கான காரணத்தை விசாரித்தனர்.
அப்போது, தாராபட வேட்டில் கோவிக்கு செல்லும் பாதையை செல்வராஜ் அடைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
கோவிலுக்கு பாதை வசதி கேட்டு செல்வராஜியிடம் சென்று சுரேஷ் உள்ளிட்ட சிலரை அவர் மிரட்டி அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் உள்ளிட்டோர் அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.
மேலும், கோர்ட்டில் சரணடைந்த 2 பேரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கப்படும்” என்று போலீசார் தெரிவித்தனர். #tamilnews