புதுவை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
புதுவை சட்டமன்ற சபாநாயகர் பொறுப்பை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து வகித்து வந்தார். புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படவுள்ளது.
இதற்காக சட்டசபைக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும். புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்காக புதுவை சட்டசபை நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று மதியம் 12 மணி வரை சட்டசபை அலுவலக நேரத்தில் சட்டசபை செயலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யாரும் மதியம் 12 மணி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. இதனால் புதுவை சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து புதிய சபாநாயகருக்கு சபையில் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து பேசுவர். இதன்பின் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் சிவக்கொழுந்து காலவரையின்றி ஒத்திவைப்பார்.
புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவக்கொழுந்து ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். 2016 சட்டமன்ற தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.