தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் (பொறுப்பு)மணிமேகலை தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
அப்போது மெலட்டூர் அருகே உள்ள மேலகுளக்கரை கிராமத்தை சேர்ந்த சம்பத் மனைவி சிவப்பிரியா (வயது 38) என்பவர் தனது தாயார் முத்துலட்சுமி (58), தங்கை தனலட்சுமி (35) மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார்.
அப்போது திடீரென சிவப்பிரியா கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான்கொண்டு வந்த கைப்பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தன் உடல் மீதும், தனது தங்கை தனலட்சுமி மீதும் ஊற்றினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து அவர்களிடம் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை கைப்பற்றி 2 பேரின் உடலில் தண்ணீரை ஊற்றினர்.
இதுகுறித்து சிவப்பிரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில். எனது மகன் பாலாஜியை கடந்த 22-ம் தேதி 9 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அடித்து தாக்கினர். தற்போது என் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து நான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த நான் தீக்குளிக்க முயற்சி செய்தேன். மேலும் எனது தங்கையின் மீதும் மண்ணெண்ணையை ஊற்றினேன் என்றார். இதையடுத்து சிவப்பிரியா மற்றும் தனலட்சுமியை போலீசார் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலத்தில் சகோதரிகள் தீக்குளிக்க முயன்ற சம்பம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.