சென்னை:
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த இந்துஜாவை காதல் தகராறில் ஆகாஷ் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றார்.
இந்துஜாவின் தாய் ரேணுகா, சகோதரி நிவேதா ஆகியோர் மீதும் ஆகாஷ் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேல் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் தாய் ரேணுகாவின் உடல் மோசமான நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில் இந்துஜா தீவைத்து கொளுத்தப்பட்ட போது அவரை காப்பாற்ற தாய் ரேணுகாவும் தங்கை நிவேதாவும் கடுமையாக போராடி உள்ளனர்.
இதனை நிவேதா போலீசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று (கடந்த 13-ந்தேதி) இரவு 9 மணிக்கு எங்கள் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
எனது தாய் ரேணுகா சென்று கதவை திறந்தார். அப்போது ஆகாஷ் வெளியில் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று விசாரித்த போது நான் இந்துஜாவிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறினார்.
இதனால் ஆகாஷை வீட்டுக்குள் அனுமதித்தோம். வீட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்து எனது அக்காள் இந்துஜாவுடன் ஆகாஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆகாஷ் ஏற்கனவே தயாராக கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென இந்துஜாவின் மீது ஊற்றினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நானும், தாய் ரேணுகாவும் ஓடிச்சென்று ஆகாசை தள்ளி விட்டோம். அப்போது அவர் எங்கள் இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றினார். திடீரென சிகரெட் லைட்டரை பற்ற வைத்து விட்டார். இதில் எங்கள் 3 பேர் மீதும் தீ பரவியது. இந்துஜாவை காப்பாற்ற போராடிய நாங்களும் உடல் கருகினோம்.
எங்களது அலறல் சத்தம் கேட்டு கீழ்தளத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை தள்ளி விட்டு விட்டு ஆகாஷ் ஓடிவிட்டார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் வீட்டிலேயே இந்துஜா இறந்து விட்டாள். எவ்வளவோ போராடியும் எனது அக்காவை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
இவ்வாறு நிவேதா கூறியுள்ளார்.