காட்டெருமையை வேட்டையாடிய 5 பேரையும், பறிமுதல் செய்த இறைச்சி, அரிவாளையும் படத்தில் காணலாம். 
செய்திகள்

சிறுமலையில் காட்டெருமையை வேட்டையாடிய 5 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் காட்டெருமையை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மாலை மலர்

கோபால்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் தவசிமடையை அடுத்த சிறுமலை அடிவாரத்தில் கரட்டுக்காடு என்னுமிடத்தில் ஒரு கும்பல் காட்டெருமையை வேட்டையாடியதாக சிறுமலை வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறுமலை வனச்சரகர் மனோஜ் தலைமையில் வனக்காவலர்கள் சிறுமலை அடிவாரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் ஒரு கும்பல் காட்டெருமை இறைச்சியை சமைக்க முயன்றது. அந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் தவசிமடையை சேர்ந்த பச்சையப்பன் (வயது 39), சவேரியார்பட்டியை சேர்ந்த ஸ்டீபன் (22), மைக்கேல் (23), பாஸ்கர் (20), அருள்பிரிட்டோ (23) ஆகிய 5 பேர் என்பதும், அவர்கள் காட்டெருமையை வேட்டையாடியதும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 20 கிலோ காட்டெருமை இறைச்சி, அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களின் கூட்டாளியான தவசிமடையை சேர்ந்த வடிவேல் (33) என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.